Saturday 28 June 2014

நம்பிக்கை. FAITH.

                            நம்பிக்கை FAITH.
                             ~~~~~~~~~~~~~~~~
   இன்று 28-6-2014ல், சென்னையில் பெய்த திடீர் மழையில், போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுப்பட்டு வந்த 11 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து மூவர் பலியானதாக தகவல்.

    இடிபாடுகளுக்கிடையே சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை, குறிப்பாக,ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அனைவரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என நம்புவோம்.

   மேலோட்டமான இத் தகவலோடு கூடுதல் செய்தி-

   
‘Trust Heights’ என்ற நிறுவனம் சென்னை, போரூர்,  மவுலிவாக்கத்தில் பதினோரு அடிக்குமாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்களைக் கட்டி வந்தது.

  அதில் ஒன்றின் பெயர்
‘The Faith’.

 
  மற்றொன்றின் பெயர் ‘The Belief’ .

  அதில் உள்ள வீடுகள் கட்டி முடிந்தவுடன் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று விளம்பரப் படுத்தப்பட்ட  கட்டிடம் இன்று கட்டிக் கொண்டிருக்கும் நிலையிலேயே இடிந்து வீழ்ந்தது.

   தொகுப்பு வீடுகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு இந்த ஆண்டு கொடுக்கப்பட்டுவிடும் என்று உறுதி அளிக்கப்பட்டாதாய் தகவல்.

   வாங்க விரும்பியவர்களுக்கு உறுதியளித்த நிறுவனம் கட்டிடத்தின் உறுதி பற்றி கவலைகொள்ளாதது கொடுமையிலும் கொடுமை!

   இது குறித்து விளம்பரம் அளித்துவந்த நிறுவனம் ஒன்று விளம்பரம் விளக்கிக் கொள்ளப்பட்டதாய் அறிவித்துள்ளது.

   இந்த சோக நிகழ்வில் இன்னொரு சோகம் என்னவென்றால், இடிந்துவீழ்ந்த கட்டிடத்தின் பெயர் ‘The Faith’.

    வீழ்ந்தது
The Faithஎன்கின்ற கட்டிடம் மட்டுமல்ல!

    கட்டுமான நிறுவனங்களின் மீதிருந்த
Faithம் -நம்பிக்கையும் தான்.

        பணம் பண்ணும் வித்தையைக் மட்டுமே கருத்தில் கொள்ளும்

கட்டுமான நிறுவனங்கள் அதனைக் கைவிட்டு இனிவரும் காலங்களில்

குடியிருக்க வரும் மக்களின் உயிர்பாதுகாப்பு குறித்து அக்கறை

காட்டுவார்கள் என நம்புவோம்.



Thursday 26 June 2014

தினமலர் தலையங்கம் தமிழ்மொழி மீதான அக்கறையா???

                            தமிழும் தமிழரும்-6
                             ~~~~~~~~~~~~~~~~~
   தனது 37 பக்கங்களில் ஒன்றில் கூட பிறமொழிச் சொல் இல்லாமல்,  நல்ல தமிழ்மொழியில் வெளியிடவே முடியாத தினமலர் தனது தலையங்கம் மூலம் தமிழ்மொழி மீது காட்டுவது அக்கறையா???

‘தமிழைத் தாய்ப்பாலுடன் கலந்து ஊட்டும் தாய்மார்கள் எண்ணிக்கை குறைந்து ‘மம்மி டாடி’ பேசுவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது’.
                                       - தினமலர் தலையங்கம்,26/6/14.
இதை ‘தினமலர்’ சொல்லக்கூடாது.

நகரப்பகுதியில் பல தாய்மார்கள் இப்படிச் செய்யலாம். ஆனால் தமிழகத்தின் லட்சோபலட்ச கிராமங்களில் இந்நிலை இல்லவேயில்லை.

சரி, சில தாய்மார்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தர, அதனால் பழக்கத்திற்கு வரும் பிறமொழிப் பயன்பாடு என்பது தமிழை, அதன் வளத்தை சிதைக்கும் என ஏற்றுக்கொள்வோம். ஆனால், அதனை அதிவிரைவாகச் செய்யும் வேலையை தினமலர் தானே செய்துவருகின்றது!

 
அன்றாடம் மோசமான ஆங்கில/பிற மொழிச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து பல லட்சம் வாசகர்களிடத்தில் அவற்றை நடைமுறைப் படுத்திவரும் வேலையை, ‘பல லட்சம் வாசகர்கள் படிக்கும் நாளிதழ்’ என மார் தட்டிக்கொள்ளும், தினமலர் தானே செய்துவருகின்றது!

  அடுத்து, ‘வேலை கிடைக்கவேயில்லை’, தமிழ் பட்டமேற்படிப்பாளர்களுக்கு என்று முதலைக்கண்ணீர் வடிக்கும் தினமலர் தனது நிறுவனத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களையா வேலையில் வைத்துள்ளது??

     வெறுமனே, ‘ இது தமிழ்மொழி ’ என்று தெரிந்தவர்களைத் தானே வேலைக்கு வைத்துள்ளது.

     அதனால்தானே அப்பத்திரிக்கை தனது 37 பக்கங்களில் ஒன்றில் கூட பிறமொழிச் சொல் இல்லாமல்,  நல்ல தமிழ்மொழியில் வெளியிடவே முடியவில்லை !!

   ஒரு மொழியால் பொருளீட்டி, உண்டு வளரும் பத்திரிக்கைகள் நன்றிக்கடனாக முதலில் செய்யவேண்டியது அம்மொழியைக் காக்கும் வேலையாகத்தான் இருக்கவேண்டும். அதை விடுத்து மாற்றான் தாய்க்கு கொடிபிடிப்பது கேவலம்!

Friday 20 June 2014

தமிழும், தமிழரும் - 5.


                                                              தமிழும், தமிழரும் - 5.
                                                                     ~~~~~~~~~~~~~

                         அந்நிய மொழித் திணிப்பு எதிர்ப்பு !
  ஆங்கில மொழியை ஆங்கிலேயர்  கட்டாயப்படுத்தி தமிழர் மீது திணிக்கவில்லை...
 ஆனால், அக்காலத்தில் அம்மொழி ஆள்பவனது மொழியாக, ஆதிக்க மொழியாக இருந்ததால்   அதைக் கற்றுக்கொண்டால் நாட்டை ஆள்கின்றவரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் அதன் மூலம் சலுகைகளைப் பெறலாம் என்கின்ற எண்ணத்தால் சிலருக்கு ஆங்கிலத்தின் பேரில் ஈர்ப்பு ஏற்பட்டது.
 அப்படி கற்றுக்கொண்டதால் அந்நபர்களுக்கு 'ஆளுபவனின் மொழி' அறிந்தவன் என்கிற பெயரை ஏற்படுத்தியது.
 இக்காரணத்தால்,ஆங்கிலம் கற்றவர் மீதான   மதிப்பு பாமரரிடையேயும், ஏன் படித்தவரிடையேயும் கூட உயரத்தொடங்கியது.
   நாளடைவில் இப்பெயருக்கும் புகழுக்குமான ஆசைப் பலருக்கு ஏற்படலாயிற்று.
 அதுவே காலப்போக்கில் கட்டுக்கடங்காத ஆங்கில மோகத்தை ஏற்படுத்தி தாய்மொழி மட்டுமே தெறிந்தவரை இளக்காரமாகப் பார்க்கும் நிலை ஏற்படலாயிற்று.
 அன்றிலிருந்து இன்றளவும் 'அய்யா சீட்டு கொடுங்க' என்று கோரும் தமிழருக்கு கொடுக்கப்படும் மறியாதையை விட 'ஒன் டிக்கெட் ப்ளீஸ்' என்று  கோரும் தமிழருக்கு கொடுக்கப்படும் மறியாதை சற்று அதிகமாகவே உள்ளது  என்பதை எவராலும் மறுக்க முடியாது.
 தாய்மொழி இருக்கும்போது, அன்றைய காலத்தில், உரிய தேவையற்று, இன்னொரு மொழியான ஆங்கிலத்தின் மேல் ஏற்பட்ட மோகத்தின் விளைவாகவே இன்றளவும் தமிழ் மட்டும் பேசும் தமிழரை இளக்காரமாக, இரண்டாம் தர மனிதராகப் பார்க்கப்படும் நிலை தமிழரிடையே உள்ளது.
 இச்சூழலில், இன்னுமொறு மொழிக்கு, அதிலும் அம்மொழிக்குசிவப்புக் கம்பள வரவேற்பு’ கொடுத்து உலவ விடுவதால் தமிழ் மட்டுமே அறிந்தோர், தமிழ் மட்டுமே பேசுவோர் மேலும் பின்னுக்குத் தள்ளப்பட மாட்டார்கள், தமிழ் மொழி மூன்றாம் தரமாகக்கூடிய நிலை வராது என்கின்ற உத்தரவாதத்தை எவராலும் தர இயலாது.
 இது ஒருபுறமிருக்க, ஏற்கனவே பலப் பல கலப்புச் சொற்களால் தமிழ்மொழியின் வளம் குறைந்துகொண்டே வரும்வேளையில் மொழித்திணிப்பால் தமிழ் மொழி சிதைந்து போகாது என்று  உறுதியாகக்கூற முடியாது.

  தமிழ் மொழியின் வளம்பெருகக் குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்றும்  தமிழ் மொழி தமிழரிடையிலேயே இரண்டாம், மூன்றாம் தரநிலைக்குத் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பன போன்ற எண்ணங்களாலேயேஅந்நிய மொழித் திணிப்பு எதிர்ப்பு’ உண்டாகின்றது

Sunday 18 May 2014

பிரதமர் ஆக ஆசையா...



                   பிரதமர் ஆக ஆசையா...
                          ~~~~~~~~~~~~

   உங்களுக்கு பிரதமர் ஆக ஆசையா...

   நினைத்த மாத்திரத்தில் ஆக முடியாது ..

   ஆனால், அடுத்தமுறை ஆவதற்கு ஐடியா இருக்கு...


   முக்கியமானதாலே கொஞ்சம் பொருமையா படிங்க...


   பொது வாழ்க்கை... சேவை இதெல்லாம் மறந்திடுங்க..



     .....எதுவேண்டுமானாலும் செய்யுங்கள்....


   ஆனால், கருத்தாய் லட்சக்கணக்கான
கோடி பணம் சம்பாதியுங்கள்....


   இரண்டாண்டு
+  தண்டணை பெற்றுவிடாமல் மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.


  தேர்தலில் 400 எம்பி வேட்பாளார்களை ... அந்த 2 +    இல்லாத,  யாரை வேண்டுமானாலும் தேர்தலில் நிறுத்துங்கள்...


  தேர்தல்நாளுக்குக் கடைசீ 3 நாள்.... சேர்க்கவேண்டியவதை சேர்த்துவிடுங்கள்...

  99% வேலை முடிஞ்சுது..

  முடிவுகள் அறிவிப்பிற்கு இடைப்பட்ட காலத்தில் சாவகாசமாக உட்கார்ந்து யாருக்கு என்ன போர்ட்ஃபோலியோ ன்னு முடிவு பண்ணிகுங்க...

  முடிவு அரிவித்த இரண்டு மூணு நாளில் குடியரசுத் தலைவர் உங்களை அழைப்பார்...

  DONE !


  என்ன, எல்லாத்தையும் வாங்கிகிட்டு
NOTA  ன்னு போட்டு சிலர் எரிச்சல் படுத்துவாங்க...


  அதனாலென்ன வேலை முடிஞ்சுதில்ல !


  பொதுவாக இதைப் படிப்பவர்களுக்கு கோபம் வரும், திட்டத் தோணும்.


  ஆனால்..

  பொது வாழ்வில் பங்கெடுப்போருக்கும், அரசியலில் இருப்பவர்களுக்கும், தேர்தல் வேலை செய்பவர்களுக்கும் மேலேயுள்ள வரிகளின் வலி தெரியும் !


**********

Wednesday 14 May 2014

தமிழும் தமிழரும்-4.சித்திரை முழுநிலவு நாள் இந்திர விழா, கோவலன்- மாதவி வாழ்வில் நடந்தது..



தமிழும் தமிழரும்-4
~~~~~~~~~~~~~~~~~~~~~~

     இன்றய நாள் – சித்திரை முழுநிலவு நாள் என்பதை பெரும்பாலானோர் அறிவோம்.

     தமிழர் வலாற்றில் இன்றய நாள் என்ன நாள் என்று அறிவோமா...வாருங்கள் அறிந்துகொள்வோம்.

     தமிழர் வலாற்றில், சோழ இராச்சியத்தில் இன்றய நாளில் நடந்தவை இரண்டு.

     அவற்றில் முதலாவது- இந்திர விழா. இரண்டாவது- கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோர் வாழ்வில் நடந்தவொரு நிகழ்வு.

1.இந்திர
விழா!
~~~~~~~~~~~~~~~~

தோன்றிய காரணம்
~~~~~~~~~~~~~~~~~~~~~
     பழம் பெருமையும் சிறப்பும் வாய்ந்த நகரமாக விளங்கிவந்தது சோழரது கடற்கரை நகரமாகிய புகார் நகரம்.

     அப்படிப்பட்ட புகார்  நகரம் மேலும் வளமுடன் பொலிவடைந்து விளங்க  வேண்டுமானால் இந்திரனுக்கு விழா எடுக்க வேண்டும் என முனிவர் அகத்தியர் தெரிவிக்க, அப்போது புகார் நகரத்தை ஆட்சி செய்த சோழ மன்னன் தொடித்தோட் செம்பியன் அவ்வாறே விழா எடுக்க  இசைவு அளித்ததுடன், ‘இந்திர விழா’ மிகச் சிறப்புடன் நடைபெற ஏற்பாடுகளையும் செய்தான் என்று கூறப்படுகின்றது.

      அம்மன்னனின் காலத்திற்குப் பின்னர் வந்த மன்னர்களாலும் ஆதரிக்கப்பட்ட இந்திர விழாவானது, மன்னர்களும் மன்னர் ஆட்சியமும் முடிவு பெற்று குடியாட்சி விளங்கும் இன்றளவும் ‘சித்திரை மாதத்து முழுநிலவன்று (பெளர்ணமியன்று)’  அப்பகுதியில் வெகு விமரிசையான விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.


    இதுகுறித்து சிலப்பதிகாரத்தில் 'விழாவறை காதை' பகுதியில் இளங்கோ அடிகள் அருமையாகக் குறிப்பிடுகின்றார். அவர் இந்திர விழா தொடங்கிய முறையையும், சோழ மன்னனின் அருஞ் செயலும் ஆற்றலும் வியந்து போற்றப்படும் செய்தியையும் கூறுவதிலிருந்து  நாம் இந்திரவிழா கொண்டாட்டத்தை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது.

2.கோவலன்-மாதவி
~~~~~~~~~~~~~~~~~~~~~


     புகார் நகரம் இன்று பூம்புகார் என்னும் பெயரில் வழங்கப்படுகிறது.

     பூம்புகாரில், காவிரி ஆற்றங்கரையோரம் கோவலனும் மாதவியும் இந்திர விழாவினைக் கொண்டாடி மகிழும் வேளையில் நடந்தது அந்த துயர நிகழ்வு.

      மகிழ்வாய் மாதவியோடு கோவலன்
கவிரியாற்றங்கரையில் வீற்றிருக்கும்போது அவன் காவிரி ஆற்றினை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி யாழிசைத்துப் பாடல் ஒன்றைப் பாடலானான்.

     அவ்வாறு கோவலன் பாடியதைக் கேட்ட மாதவி, அவன் காவிரி ஆற்றைக்குறித்துப் பாடுகின்றான் என்பதைப் புரிந்துகொள்ளாது, அவனது உள்ளத்தில் வோறோரு பெண்ணின் நினவு உள்ளதாவும், அவன் தன்னை விரும்பிய காதல் நிலையிலிருந்து வேறுபட்டான் என்றும் எண்ணி ஊடல் காரணமாய் அவனடமிருந்த யாழினை வாங்கித் தானும் வேறொரு குறிப்பினை உடையவள் போலக் கானல் வரி பாடினாள்.


       ஆனால், அவளது பாடலைக் கேட்ட கோவலனோ, மாதவி வேறொரு ஆடவனை மனதில் வைத்துப்பாடினாள் என்றெண்ணி, தனது வாழ்வில் அவளோடு கை கோர்த்து இணைந்திருந்த பிணைப்பை அந்நிலையிலேயே கைவிட்டவன் ஆனான்.


       இரவாகிவிட, ‘‘பொழுது போனது நாம் எழுவோமா ’’ என மாதவி கேட்டதும் அவளோடு கூடிச் செல்லாமல், கோவலன் அவளை விட்டுத் தனியாகப் பிரிந்து சென்றதும் இதே சித்திரை முழுநிலவு நாளன்று (பெளர்ணமியன்று) தான்!

     தமிழர் யாவரும் மறந்து போனது பூம்புகாரின் இந்திர விழாவை மட்டுமல்ல மாதவியைப் பிரிந்த நாளையும்தான். இவற்றை இன்றளவும் ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பது தமிழ் மொழி கண்ட சிலப்பதிகாரம்தான்!


(
ஓவியம் புகழ்மிக்க .செ வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது )